Friday, September 23, 2011

தமிழக அரசியல் களம் மாறியது - சட்டசபையில் கூட்டு: உள்ளாட்சியில்

சென்னை: தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க., வுடனான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக இரு கட்சிகளும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்., 17 மற்றும் 19 தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி வாரியாக அ.தி.மு.க, வெளியிட்டு வருகிறது. இதற்கு கூட்டணியில் உள்ள கம்யூ., தனது கோபத்தை வெளிப்படையாக ( இது கூட்டணி தர்மத்திற்கு நல்லது அல்ல ) பதிவு செய்தது. ஆனால் கூட்டணியில் இருக்கும் முக்கிய தே.மு.தி.க., எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட மதுரை வந்த போது நிருபர்கள் கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்று ஒதுங்கி கொண்டார். 

தே.மு.தி.க., வேட்பாளர் பட்டியல் : இந்நிலையில் தே.மு.தி.க., இன்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்க துவங்கியிருக்கிறது. இதன்படி 9 மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலின்படி சென்னை- வேல்முருகன், கோவை- பாண்டியன், வேலூர்-சத்தியவாணி, தூத்துக்குடி-ராஜேஸ்வரி, சேலம்- இளங்கோவன், ஈரோடு- சிவக்குமார்,திருப்பூர்- தினேஷ்குமார், மதுரை- கவியரசு, நெல்லை- சீத்தாலெட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அடுத்தக்கட்டமாக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் அந்தக்கட்சி அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

குறைந்தது 6 முனை அல்லது 7 முனை : நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் இது வரை இல்லாத அதாவது கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. காங்கிரசை தி.மு.க., கழற்றி விட்டது. ம.தி.மு.க., தனித்து போட்டியிடும் என வைகோ அறிவித்து வி‌ட்டார். பா.ம.க.,, விடுதலை சிறுத்தைகள் சவாரிக்கு யாரும் இடம் தராததால் தனித்து நிற்கிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூ., பாஜ., கட்சிகள் என்ன செய்யப்போகிறது என்று இதுவரை முடிவு இல்லாமல் இருக்கிறது.

எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்புகள் பலருக்கு பறிபோகும் : கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடனான கூட்டணியில் இருந்த கட்சிகள் தங்களுக்கு சீட் ஒதுக்குவதில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விரிசல் ஏற்பட்டது. கூட்டணி கட்சியினருடன் யாருக்கு எந்த தொகுதி என்று உடன்பாடு ஏற்படும் முன்பாக அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. நீண்ட காலமாக நண்பராக இருந்த ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை என்றும் தொகுதி ஒதுக்கீடு போதாது என்றும் வெளியேறியது. பின்னர் நடந்த சுமுக பேச்சின் காரணமாக தொகுதி, வேட்பாளர்கள் என மாற்றம் வந்தது. கடந்த காலம் போல் இந்த தேர்தலிலும் அ.தி.மு.க., கையாண்டதால் தே.மு.தி.க., எந்த பேச்சும் இல்லாமல் தனித்து போட்டி என அறிவித்து விட்டது. பலக்கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் ஓட்டுக்கள் சிதறி எதிர்பார்க்கும் வெற்றி வாய்ப்புகள் பலருக்கு பறிபோகும், சிலருக்கு அதிர்ஷ்டவசமாக கைகூடும்.

எப்படியோ தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்தது 6 முனை அல்லது 7 முனை போட்டி உருவாகியிருக்கிறது தமிழகம். கூட்டணி நிலை , அரசியல் காட்சிகள் மாறினாலும் , யாரை தேர்வு செய்வது, யாரை ஒதுக்குவது என வாக்காளர் குழப்பம் அடையாமல் இருந்தால் சரிதான்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grocery Coupons